ஆந்திரா- தெலங்கானா எல்லையில் கஞ்சா கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

திருமலை: ஆந்திரா- தெலங்கானா எல்லையில் சரமாரி கற்கள் வீசி தாக்குதல் நடத்திய கஞ்சா கடத்தல்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்தனர்.  ஆந்திர மாநில எல்லை மாவட்டமான விசாகப்பட்டினத்தில் உள்ள மலை கிராமத்தில் இருந்து கஞ்சா அதிகளவு கடத்தப்படுகிறது என்று தெலங்கானா மாநிலம், நல்கொண்டா போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நல்கொண்டா காவல் நிலைய 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 போலீஸ்காரர்கள் விசாகப்பட்டினம் மலை கிராமத்தில் உள்ள துலாபாய்கடா என்ற இடத்திற்கு சோதனைக்காக சென்றனர்.

போலீசார் வருவதை தெரிந்து கொண்ட 20க்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல்காரர்கள், அங்கு பதுங்கியிருந்தனர். போலீசார் தாங்கள் பதுங்கியிருந்த இடத்தின் அருகே வந்தபோது அவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து, போலீசார் தற்காப்புக்காக கடத்தல்கார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த கஞ்சா கடத்தல்காரர்கள் திடீரென அங்கிருந்து தப்பியோடி விட்டனர். போலீசார் அவர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. அனைவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மலைகிராமத்தில் உள்ள சிந்தப்பள்ளி அடுத்த அண்ணாவரம் ஊராட்சி காளிபடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்களான கில்லோகாமராஜூ, ராம்பாபு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக நரசிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நரசிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கஞ்சா கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நல்கொண்டா எஸ்பி ரங்கநாத் கூறுகையில், ‘‘கஞ்சா கடத்தல்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதனால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்’’ என்றார்.

Related Stories: