நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தடையாக உள்ளனர்: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கான அரசின் முன்னேற்ற நலத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருப்பதாக பாஜ தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார். பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய பாஜ தேசியத் தலைவர் ஜேபி நட்டா, ``பாஜ தொண்டர்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அரசியல் வழிகாட்டிகளாக மட்டுமின்றி சமூக வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றனர். மோடி அரசு கொரோனா தொற்று கால கட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கியது. தற்போது 100 கோடி இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கான அரசின் முன்னேற்ற நலத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன,’’ என்று தெரிவித்தார்.

சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரும் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான ராமன் சிங் பேசுகையில், ``கடந்த சில மாதங்களாக கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளின் கூட்டம் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. கட்சி பணியாற்றி கொண்டே சமூகத்திற்கு எப்படி உதவுவது என்பது பற்றி கட்சி தொண்டர்களுக்கு பாஜ வழிகாட்ட உள்ளது,’’ என்று கூறினார்.

Related Stories: