பிஎஸ்எப் அதிகார எல்லை நீட்டிப்பு: ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் கண்டனம்

சண்டிகர்: எல்லை பாதுகாப்புப் படையின் அதிகார எல்லையை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளதை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட விவகாரம் என்று இம்மாநில அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்தது. பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்குட்பட்ட சர்வதேச எல்லைகளில் 15 கி.மீ. தூர எல்லைக்குள் கைது, சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த 15 கி.மீ. தூரம் என்பதை 50 கி.மீ. தூரமாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்தது. இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகாரம் இம்மூன்று மாநிலங்களிலும் அதிகமாகி உள்ளது. ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சரண்ஜித், ``இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. சட்டம், ஒழுங்கு மாநிலத்துக்குட்பட்டது. மாநிலத்துக்குள் தீவிரவாதத்தை ஒழிக்கும் போலீசாருக்கு எந்த அசம்பாவிதத்தையும் தடுக்கும் திறமை உள்ளது. மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் எல்லை பாதுகாப்பு சட்ட திருத்தம் செய்ததை அரசு கண்டிக்கிறது. இது தொடர்பாக விவாதிக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும். தேவைப்படும் பட்சத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.

Related Stories: