ஆஸி.யின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலால் தென்கிழக்கு ஆசியாவில் அதிகார போட்டி அதிகரிக்கும்: இந்தோனேஷியா, மலேசியா கவலை

ஜகார்த்தா: ஆக்கஸ் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இருப்பதற்கு இந்தோனேஷியா, மலேசியா நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இணைந்து ஆக்கஸ் எனும் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த 3 நாடுகளும் இணைந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம், அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்பம் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க வல்லுநர்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 8 அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும்.  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் கடல்வழி கண்காணிப்பு தீவிரமடைவதுடன், இக்கூட்டணியின் ராணுவ இருப்பு வலுப்படும்.

இதற்கு ஆஸ்திரேலியாவின் அண்டை நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தோனேஷியா வந்துள்ள மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா, ஜகார்த்தாவில் நேற்று இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘ஆஸ்திரேலியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலால் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய நாடுகளுக்கு இடையே போட்டி அதிகரிக்கும். எனவே பிராந்தியத்தில் அமைதி நீடிக்க வேண்டும், நிலைத்தன்மை தொடர வேண்டும், ஆயுதப் போட்டி, அதிகார போட்டி மூலம் எந்த பதற்றமும் விளைவிக்கக் கூடாது என்பதில் இந்தோனேஷியாவும், மலேசியாவும் உறுதியாக உள்ளன’’ என்றனர்.

Related Stories:

More
>