தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நவம்பர் 1ம் தேதி, பள்ளிகள் திறப்பிற்கு பிறகு பள்ளி தலைமையாசிரியர்களிடம் பேசி, பெற்றோர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு மருத்துவ சேவை செய்யப்படும். தமிழகத்தில் 2 பல் மருத்துவ கல்லூரிகள் தான் அரசின் சார்பில் இயங்கி வருகிறது.

விருதுநகர், புதுக்கோட்டையில் பல் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும். தமிழக அரசின் தடுப்பூசி போடும் பணியை பாராட்டி ஒன்றிய அரசு தடுப்பூசிகளை விரைந்து அளித்து வருகிறது. அந்தவகையில், இப்போது 53,61,729 தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளது. மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் விழிப்புணர்வு பெற்றுள்ளது. இதனால், பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தவாரம் 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 50 ஆயிரம் முகாம்களின் மூலம், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம்  சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது.

5வது முகாமை பொறுத்தவரையில் 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 30,42,509 பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 67 சதவீதம் பேர் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வரும் புதன்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்த கூட்டம் நடைபெற உள்ளது. எல்லா ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மட்டும் 2,500 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>