செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தேர்தலில் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தக்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியவற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் 2021 மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்  மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்/ ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல்  செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியவற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: