பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் விரைவில் விண்ணப்பம்

சென்னை: பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், நீட் தேர்வு முடிவுக்கு பின் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கும். அதன்படி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, கடந்தாண்டு போலவே பி.எஸ்சி நர்சிங் மற்றும் பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்க உள்ளது.

மேலும் இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 17 துணைநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கு எம்.பி.பி.எஸ்,  பி.டி.எஸ், படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்தப்பின் சேர்க்கை நடைபெறும். அதற்கு முன்னதாக விண்ணப்ப பதிவு துவங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அரசு அனுமதி அளித்தால் விரைவில் விண்ணப்பதிவு துவங்கும். மேலும் விண்ணப்ப பதிவு துவங்குவதற்கு முன்பாக இது குறித்து விவரங்கள் https://tnmedicalselection.net, https://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.

Related Stories: