மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர்  நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நினைவிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றினை செயல்படுத்திய விபரம், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டியது தொடர்பாக நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலுவிடம், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவை, நிலுவையில் உள்ள பணிகளின் விபரங்களை எடுத்துரைத்தார்கள். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ”இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவை, பிறப்பிக்கப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக பொதுமக்களின் பயன்படுத்த தக்க வகையில் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதைப்போல, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த பணியிலும் காலதாமதம் இருக்க கூடாது” என்று அறிவுறுத்தினார்.

Related Stories: