பூங்கா பராமரிப்பு பணிகளில் அலட்சியம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.4.96 லட்சம் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பூங்கா பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காட்டிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.4.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பூங்கா துறை சார்பில் மாநகரில் சுற்றுச் சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநகராட்சி பூங்காத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், பூங்கா பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு கடந்த ஜூலை 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரூ.4,96,317 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>