விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் விஜிலென்ஸ் சோதனைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தொடர்புள்ள இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று முன்தினம் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை அதிமுக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>