மீலாது நபி: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மீலாது நபியை முன்னிட்டு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி: .நபிகள் நாயகத்தின் முக்கிய செய்தி என்பது உலகளாவிய அமைதி  மற்றும் சகோதரத்துவத்திற்கானது. இந்த நல்ல தருணத்தில், அமைதியான, முற்போக்கான மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துக்களை காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை,  எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும்,  வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த  நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

வைகோ(மதிமுக பொதுசெயலாளர்): நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானவராக அன்பு, சகோதரத்துவம், உண்மை, ஒழுக்கம்  போன்ற நல்லுபதேசங்களை வாரி வழங்கியவர் நபிகள் நாயகம். உலகிற்கு  அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு தமாகா  சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி(பாமக இளைஞர் அணி தலைவர்): மதங்களைக் கடந்த நல்லிணக்கம், அமைதி, மகிழ்ச்சி, பசியில்லா உலகம் ஆகியவை தான் நபிகள் நாயகம் விரும்பியவை ஆகும். அதற்காகத் தான் அவர் பாடுபட்டார்.  தமது வாழ்நாளில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார். அவர் போதித்த பாடங்களைக் கடைபிடித்து, அவர் விரும்பியவாறு ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம்.

சரத்குமார்(சமக தலைவர்): மதச்சார்பின்மை என்னும் மகத்துவக் கொள்கை கொண்ட நமது தேசத்திற்கு நபிகள் நாயகம் போதித்த சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். அந்த வகையில் அன்பு, அமைதி, கருணை, ஈகை, ஒழுக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என நபிகள் நாயகம் அருளிய பல வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிக்க உறுதியேற்போம்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): இறை தூதராக அவதரித்து, நம்பிய மக்களைக் காத்து நின்று, நல்லிணக்கத்தைப் போற்றி, மனிதகுலம் மாண்படைய எண்ணற்ற நல்ல சிந்தனைகளை போதித்த நபிகளின் பிறந்தநாளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்.

தமிழிசை (தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர்): மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நபிகள் நாயகம் அவதரித்த இந்த நாளில் உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓபிஎஸ், இபிஎஸ் (அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்) : இறைத்தூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில் உலகில் அமைதியும், சகோதரத்துவமும், நிறையட்டும், நலமும் வளமும் பெருகட்டும். இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துகள்.

இதே போல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர். ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளத்திற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திமுகவுக்கும் மக்களால் அமையபெற்ற திமுக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>