அமைச்சராக பதவி வகித்த 1.4.2016 - 31.4.2021 ஆகிய கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.27.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவிப்பு

* மதர் தெரசா கல்வி அறக்கட்டளை பெயரில் 14 கல்வி நிறுவனங்கள்

* சென்னையில் ரூ.14 கோடிக்கு சொகுசு வீடு, வெளிநாட்டு கார்கள்

* முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: அமைச்சராக இருந்த, 1.4.2016 மற்றும் 31.4.2021 ஆகிய கால கட்டத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.27.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் சி.விஜயபாஸ்கர்(47). இவருக்கு ரம்யா என்ற மனைவி் பள்ளி செல்லும் இரண்டு மகள்கள் உள்ளனர். விஜயபாஸ்கர் தந்தை சின்னதம்பி புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவராகவும், அன்னவாசல் பஞ்சாயத்து முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

தற்போது, அவர் அரசு துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். விஜயபாஸ்கர் பெயரில் ராசி புளூ மெட்டல்ஸ், கிரீன் லேன்ட் ஐ-டெக் புரமோட்டர்ஸ் மற்றும் ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகிறார். விஜயபாஸ்கர், கடந்த 16.5.2011ம் ஆண்டு விராலிமலை சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக எம்எல்ஏவாக தேர்வானார். அதைதொடர்ந்து 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வானார். கடந்த 1.11.2013 மற்றும் 2.5.2021 ஆகிய காலக்கட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 27.4.2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தில் தனது பிரமாண பத்திரம் தாக்கல் செய்தபோது, தனது பெயரில் உள்ள வங்கி கணக்குகள், நகைகள், வாகனங்கள், விவசாய நிலங்கள், வீடு, இன்ஸ்சூரன்ஸ் பாலிசி மற்றும் முதலீடு என மொத்தம் சொத்து மதிப்பு 6 கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 310 ரூபாய் எனவும் அதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மேலும், 1.4.2016ம் ஆண்டு காலக்கட்டத்துக்கு பிறகு, விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 6 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 466 ரூபாயிக்கு 7 டிப்பர் லாரிகள், 10 கலவை இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரம் வாங்கியுள்ளார். அதோடு 40 லட்சத்து 58 ஆயிரத்து 975 ரூபாய் மதிப்பில் 85.12 சவரன் நகைகள் மற்றும் 53 லட்சத்து 33 ஆயிரத்து 156 ரூபாயிக்கு ‘பிஎம்டபிள்யூ’ சொகுசு கார் ஒன்றும் வாங்கியுள்ளார். அந்த வகையில் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 31.3.2021 காலக்கட்டம் வரை விஜயபாஸ்கர் 57 கோடியே 77 லட்சத்து 11 ஆயிரத்து 404 ரூபாய் சொத்துக்கள் சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த தொகைக்கு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமான வரித்துறையில் வீட்டு செலவு, கடன் வாங்கியது, கடன் கொடுத்து என 34 கோடியே 51 லட்சத்து 62 ஆயிரத்து 529 ரூபாய்க்கான செலவுகள் செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். வருமான வரித்துறையில் செலவினங்கள் காட்டிய ரூ.34.51 கோடியை கழித்தால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் தங்களது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சட்ட விரோதமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை இருவரும் ‘மதர் தெரசா’ என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்று தொடங்கி அதன் மூலம் முறைகேடாக சம்பாதித்த பணத்தை முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* மாஜி அமைச்சர், மனைவி மீதான வழக்கு என்ன?

அமைச்சர் பதவியை தவறாக  பயன்படுத்திய விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஓழிப்பு சட்டம் 1988ன் கீழ் 109 IPC r/w 13(2), 13(l)(c) பிரிவுகளில்  வழக்கு. லஞ்ச ஓழிப்பு சட்ட திருத்தம் 2018ன் கீழ் 13(2) r/w 13(l)(b), 12  r/w 13(2) r/w 13(l)(b) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏ 1 ஆக  விஜயபாஸ்கரும், ஏ 2வாக அவரின் மனைவி ரம்யாவின் பெயரும்  சேர்க்கப்பட்டுள்ளது.

* பிரம்மாண்ட பண்ணை வீடு தி.நகரில் நட்சத்திர பங்களா

காஞ்சிபுரம் மாவட்டடம் சிலவட்டம்- மொரப்பாக்கம் பகுதிகளில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 5,400க்கு விவசாய நிலங்கள் வாங்கி குவித்துள்ளார். சென்னை தி.நகரில் பாகிரதி அம்மன் கோயில் தெருவில் ரூ.14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரத்துக்கு சொகுசு வீடு வாங்கியுள்ளார். இதுதவிர பல்வேறு தொழில், பங்குகள் மூலம் 28 கோடியே 69 லட்சத்து 73 ஆயிரத்து 136 ரூபாயை விஜயபாஸ்கர் முதலீடு செய்து உள்ளார். அதற்கான ஆவணங்கள் அனைத்தும்  சேகரிக்கப்பட்டுள்ளது.

* குறுகிய காலத்தில் 14 கல்வி நிறுவனங்கள்

தனது பதவி காலத்தில் விஜயபாஸ்கர் ‘மதர் தெரசா’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மதர் தெரசா மெட்ரிக்குலேசன் பள்ளி, மதர் தெரசா காலேஜி ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, மதர் தெரசா பாலிடெக்னிக் கல்லூரி, மதர் தெரசா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் கேட்டரிங்க் டெக்னாலஜி கல்லூரி என அடுத்தடுத்து 14 கல்வி நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்துள்ளார்.

* 5 ஆண்டில் ரூ.51 கோடி வருவாய்: ஐடி கணக்கால் சிக்கினார்

அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘2016ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மற்றும் மனைவி பெயரில் 6 கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 310 அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக தாக்கல் செய்து இருந்தார். ஆனால், தற்போது 57 கோடியே 77 லட்சத்து 11,404 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக, வருமான வரித்துறையில் கணக்கு காட்டி உள்ளார். அதற்கான வரிகளையும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கட்டியுள்ளனர். அதன்படி மொத்தம் சேர்த்துள்ள ரூ.57.77 கோடி சொத்துக்களில் 2016ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கு ரூ.6.41 கோடியை கழித்தால் மொத்தம் 51 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்து 94 ரூபாய் கடந்த 5 ஆண்டு காலத்தில் வருமான ஈட்டி இருப்பது உறுதியாகி உள்ளது.

Related Stories:

More
>