மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆள்வதை ஜீரணிக்க முடியாத ஒன்றிய அரசுக்கு அரசியல் சட்டம், ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை: சிவசேனா கடும் தாக்கு

மும்பை: பாரதிய ஜனதா கட்சிக்கும், ஒன்றிய பாஜ அரசுக்கும் ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்திலும், சட்டம் ஒழுங்கிலும் நம்பிக்கை இல்லை. அவர்கள் கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது: மகாராஷ்டிராவை ஆளும் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியின் தலைவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதாவினர் தங்கள் சுயநலத்துக்காக ஒன்றிய விசாரணை ஏஜென்சிக்களான சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ஏஜென்சிக்களை பாரதிய ஜனதாவினர் மகாராஷ்டிரா விகாஸ் கூட்டணி தலைவர்களின் உறவினர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள். இது பாரதிய ஜனதாவினர் கொடூர எண்ணங்கள் கொண்டவர்கள் என்பதையே காட்டுகிறது. பொதுவாக ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் மக்கள் கூறுவார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் இது நேர் மாறாக உள்ளது. பாரதிய ஜனதவினர் மக்களின் கேலிப் பொருளாகிவிட்டனர். மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் பிதா மகன் பீஷ்மர் ஆவார். சிகண்டி உதவியோடுதான் பீஷ்மரை கொன்றனர்.

சிகண்டியை கேடயமாக பயன்படுத்துவது போல சி.பி.ஐ. போன்ற ஒன்றிய ஏஜென்சிக்களை பயன்படுத்தி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே அடையாளம் காட்டிவிட்டார். பாரதிய ஜனதாவினருக்கும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசுக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் ஆள்வதை அவர்களால் ஜீரணிக்க முடியாது. ஒன்றியத்தில் ஆள்பவர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இருக்கும் இந்த மனநிலையானது மட்டமான போதை பொருளை உட்கொண்டவர்களுக்கு இருக்கும் மனநிலையை போன்றது.

2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதாவின் பிடிவாதம் காரணமாக சிவசேனா அந்த கூட்டணியில் இருந்து பிரிந்தது. பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது. உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகியுள்ளார். தான் வலுறுத்தியதாலேயே உத்தவ் தாக்கரே முதல்வராக சம்மதித்தார் என்று சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார். அப்படியிருந்தும் உத்தவ் தாக்கரே பதவி ஆசை பிடித்தவர் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் கூறிவருவது நகைப்பிற்குரியது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>