மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.45 கோடி கையாடல்: கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.45 கோடி கையாடல் செய்த கிளை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவிலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2012 முதல் 2018 வரை கிளை மேலாளர் பூரண சந்திரமதி, கிளை நிதியாளர் சத்தியமூர்த்தி, கிளை துணை மேலாளர் சுந்தரகாளீஸ்வரி ஆகியோர், போலி ஆவணங்களை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழு கணக்கில் கடன் வழங்கியதுபோல், ரூ.1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வங்கியின் துணை மேலாளர் கோவிந்தன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிஐடபுள்யூ போலீஸ் மதுரை மண்டல துணை கண்காணிப்பாளர் பாண்டிசெல்வம் விசாரணை மேற்கொண்டு வந்தார். இதில் அவர்கள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பணம் கையாடல் செய்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து கிளை மேலாளர் பூரண சந்திரமதி, கிளை நிதியாளர் சத்தியமூர்த்தி, துணை மேலாளர் சுந்தரகாளீஸ்வரி ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 269 பறிமுதல் செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1.45 கோடி கையாடல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>