4 மருத்துவ கல்லூரிகளில் ஒன்றிய குழுவினர் ஆய்வு நடத்த விரைவில் தமிழகம் வருகை: மருத்துவ கல்வி அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில், 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதைப்போன்று இரண்டு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில்  194 பி.டி.எஸ் படிப்புகள் உள்ளன. மேலும் மாவட்டங்கள் 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன், மருத்துவ கல்லூரிக்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏழு மருத்துவ கல்லூரிகளில் 850 எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்கப்படாத நான்கு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க கோரியும், 100 இடங்களுக்கு அளிக்கப்பட்ட கல்லூரிகளில் 150 இடங்களாக உயர்த்தி அனுமதி அளிக்க கோரி மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையிலான குழுவினர் டில்லி சென்றனர்.

அங்கு தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மருத்துவ கல்லூரிகளின் கட்டமைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அனுமதி வழங்கப்படாத நான்கு மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி என்.எம்.சி குழுவினர் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: