பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிய 2 சிறுவர்கள் கைது: போலீசார் தீவிர விசாரணை

பல்லாவரம்: பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து, 150 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஜமீன் பல்லாவரம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, சிறுவனை கைது செய்தனர். அவன் அளித்த தகவலின் பேரில், குரோம்பேட்டை, ஜாய் நகர், 2வது தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டிலும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவனை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 150 நைட்ரவெட் என்னும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது, அதனை அவர்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தனரா, இதில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>