251 பவுன் நகை கொள்ளை வழக்கில் ஒதியஞ்சாலை போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி, ஒதியஞ்சாலையில் பிரெஞ்சு ஆசிரியை வீட்டில் 251 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. இது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலப்பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் மகள் ஷகிலா (51). திருமணமாகாத மாற்றுத் திறனாளியான இவர் பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவரது வீட்டின் மாடி அறையில் பீரோவில் இருந்த சுமார் 251 பவுன் நகைகள் கொள்ளை போனது. இதுபற்றி ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது வீட்டில் வேலை செய்த, ராசு உடையார் தோட்டத்தைச் சேர்ந்த செல்வி என்ற இருதயமேரி (38) நகைகளை திருடியது தெரியவரவே இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் அவரை உடனே கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அப்போது கொள்ளை போன நகைகளில் 68 சவரன் மட்டுமே செல்வியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுபோன நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டும் கணக்கில் காட்டப்படவில்லை என ஷகிலா குற்றம் சாட்டினர். மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சில போலீசாரின் செயல்பாடுகள் இருப்பதாகவும், ஷகிலாவின் குடும்பத்தினர் டிஜிபியிடம் முறையிட்டனர்.

இதையடுத்து டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தரவுக்கிணங்க இவ்வழக்கை புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றியமைத்து காவல்துறை தலைமையகம் கடந்த 30ம்தேதி உத்தரவிட்டது. இருப்பினும் இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஒதியஞ்சாலை போலீசாரிடமிருந்து தற்போதுதான் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், இவ்வழக்கு தொடர்பான கோப்புகளை இன்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஷகிலா குடும்பத்தினரிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்த முடிவெடுத்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள், அடுத்ததாக இவ்வழக்கில் கைதான செல்வியிடமும் தனியாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இருவரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக ஒதியஞ்சாலை போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே இவ்வழக்கு தொடர்பான ஒதியஞ்சாலை போலீசாரின் விதிமீறல் நடவடிக்கைகளை, சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து விமர்சித்து தகவல்களை பதிவிட்டு வருவது சலசலப்பு ஏற்படுத்தி வருகின்றது.

Related Stories: