நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை பணிக்காக சுருங்கிய சாலையில் வாகன ஓட்டிகள் திணறல்

நெல்லை: நெல்லை-தென்காசி இடையே நடைபெறும் 4 வழிச்சாலை பணிக்காக தற்போதுள்ள சாலையின் அளவு சுருக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் திணறியபடி வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது.

நெல்லை-தென்காசி இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் பல்வேறு வளைவுகள் உள்ளன. கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் இச்சாலையில் போக்குவரத்து நடக்கிறது. சிமென்ட், மரத்தடி, காய்கனி உள்ளிட்ட ஏராளமான சரக்கு லாரிகள் இப்பாதையில் பயணிக்கின்றன.

மேலும் சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது. இந்த நிலையில் இதற்கான பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு 4 வழிச்சாலை பணிக்காக இந்த சாலை ஓரங்களில் இருந்த புளி, வேம்பு, வாகை, 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 160க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

ஆனால் பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் முடங்கி கிடந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை காந்தி நகர் பகுதியில் இருந்து தென்காசி நகர எல்லை வரை 45.6 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது. பாவூர்சத்திரம் ரயில்வே இருப்பு பாதை மேல் மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. 18 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்

போது பணிகள் இரவு பகலாக அதிவேகமாக நடக்கிறது.

நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் தற்போதுள்ள சாலையின் இருபுறமும் புதிய விரிவாக்க சாலைக்காக ஜல்லி, மண் பரப்பப்பட்டு சாலை அமைக்கப்படுகிறது. இதன் மையப்பகுதியில் மட்டும் வாகனம் செல்ல இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி குறுகலாகவும், வளைவாகவும் உள்ளன. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு இப்பகுதியை கடக்கின்றனர். குறிப்பாக அதிக பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் போன்ற கனரக லாரிகள் வளைவுகளில் திரும்பி செல்ல சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் தேவைப்படும் பகுதிகளில் மின்விளக்கு வசதிகள் செய்வதுடன் இப்பகுதிகளில் சாலை விரைவாக அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இருபுறமும் ஒரே நேரத்தில் சாலை அமைப்பதை தவிர்த்து வாய்ப்பிருக்கும் இடங்களில் ஒரு பகுதியில் மட்டும் சாலை அமைத்து தற்போதைய போக்குவரத்திற்கு இடவசதி ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்களது வேண்டுகோளாக உள்ளது.

Related Stories:

More
>