தூக்கில் தொங்கிய மகள் சாவில் மர்மம்: பெற்றோர் கலெக்டரிடம் புகார்

திருச்சி: திருச்சியில் தூக்கில் தொங்கிய மகள் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் இன்று கலெக்டரிடம்  புகார் மனு அளித்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் கீழஅடைவளஞ்சான் தெருவை சேர்ந்தவ ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அமிர்தலிங்கம், மனைவி விஜயலட்சுமியுடன் கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகள் ரம்யா, கடந்த 2010ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து என்பவரது மகன் குமரகுருபரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர்களுக்கு 40 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தேன். ரம்யாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். குமரகுருபரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் ரம்யா ஸ்ரீரங்கத்தில் தனிவீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மாமனார் மாரிமுத்து, ரம்யாவிடம் அடிக்கடி பணம் கேட்டும், சிங்கப்பூரிலிருந்து குமரகுருபரன் அனுப்பும் பணத்தை கேட்டும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி மகள் கடந்த மாதம் 15ம் தேதி தாய் விஜயலட்சுமியிடம் செல்போனில் கூறினார். சிறிது நேரத்தில் ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் அவர்கள் தகவல் கொடுக்கவில்லை. நாங்கள் சென்று கேட்டால் சரியான பதில் கூற மறுக்கின்றனர். ரம்யா மிகவும் தைரியமானவர். அவர் இதுபோன்று செயல்களில் ஈடுபடமாட்டார். ரம்யா சாவில் மர்மம் உள்ளது. எனவே இதற்கு உரிய விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: