பாவங்கள் போகும்!: ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்..!!

மயிலாடுதுறை: ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதம் முழுவதுமாக காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். அதன்படி ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று மயிலாடுதுறை மயூரம், துலாக்கட்ட காவிரியில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி சென்றனர். மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தில் இருந்து தினந்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்று துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி தீர்வாரி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று மலையேறி சென்று பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், ஐப்பசி மாத பிறப்பு, பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை காலை 7 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி மழை பெய்தால் தடை விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Related Stories:

More
>