திருவண்ணாமலையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி: 17 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் 17 மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு கயிறு இழுக்கும் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க பொதுச்செயலாளர் பிச்சையன் தலைமை தாங்கினார். மேகநாதன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் சிவகுமார் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட கயிறு இழுக்கும் சங்க மாவட்ட தலைவர் கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டு கயிறு இழுக்கும் போட்டியினை துவக்கி வைத்தார். இப்போட்டியில், வேலூர், திருவண்ணாமலை, சேலம், சென்னை, கடலூர், செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விருதுநகர், காஞ்சிபுரம் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகள் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட ஒரு பிரிவுக்கும், 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.  மேலும், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories: