குலசேகரன்பட்டினம் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி: சாலையோரங்களில் வீசப்பட்ட வேடப்பொருட்கள்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு பெற்றதையடுத்து இன்று முதல் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விரதமிருந்து வேடமணிந்த பக்தர்கள் சாலையோரங்களில் தீச்சட்டி, வேடப்பொருட்களை போட்டுச் சென்றனர். பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட விதிமுறைகளின்படி பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபட்டது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15ம்தேதி நள்ளிரவு கோயில் முன்புள்ள பிரகார மண்டபத்தில் நடந்தது.

தசராவையொட்டி விரதமிருந்து வேடமணியும் பக்தர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டு நேமிசத்தின் அடிப்படையில் வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து சூரசம்ஹாரத்தன்று கோயிலில் படைப்பர். மேலும் தீச்சட்டி ஏந்தி வருபவர்கள் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் விட்டுச் செல்வர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாத வகையில் ஊருக்குள் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டது. எனினும் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், திருக்காப்பு அவிழ்க்கவும் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர்.

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீதிகளில் தீச்சட்டியை வைத்தும், ஆங்காங்கே வேடப்பொருட்களை களைந்து விட்டுச் சென்றனர். இதனால் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் தீச்சட்டியும், வேடப்பொருட்களும் குவிந்து காணப்படுகிறது. தசரா பெருந்திருவிழா நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை 6மணி முதல் இரவு 8மணி வரை தினமும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>