குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பால் உற்பத்தி தீவிரம்

மஞ்சூர்  குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு ஆகிய 9 கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் எஸ்டேட், தனியார் உள்பட ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. இதன்காரணமாக, தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக குந்தா பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதனால், கடந்த சில வாரங்களாகவே தோட்டங்களில் தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களாக குந்தா பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது. பசுந்தேயிலை வரத்து அதிகரித்ததால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எடக்காடு, பிக்கட்டி, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் பசுந்தேயிலை வரத்து இருமடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், அப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து தினசரி குறிப்பிட்ட அளவிலான பசுந்தேயிலை மட்டுமே தொழிற்சாலைகள் கொள்முதல் செய்து வருகிறது. வரும் நாட்களில் பசுந்தேயிலை வரத்து மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>