ஒருமாதமாக பணிகள் நிறுத்தம்; டவுன் வாகையடி முனையில் திறந்து கிடக்கும் கழிவு நீரோடை: பொதுமக்கள் அச்சம்

நெல்லை:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நெல்லை டவுன் ரதவீதிகளிலும், மார்க்கெட் சுற்றுவட்டாரங்களிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற இன்னமும் வசதிகள் இல்லை. டவுன் மார்க்கெட், தெற்குரதவீதி, அண்ணா தெருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாகையடி முனையில் சங்கமித்து, அங்கிருந்து வஉசி தெரு கழிவுநீரோடை வழியாக வெளியேறுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவுநீரோடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அண்ணா தெருவில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. நெல்லை மாநகராட்சி பொறியாளர்கள் 3 இடங்களில் கழிவுநீரோடையை உடைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.

வாகையடி முனையில் கழிவுநீரோடையை உடைத்து பெரிய பள்ளத்தை உருவாக்கினர். அப்போது கழிவுநீர் வெளியேறிய நிலையில், அந்த பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி டவுன் வாகையடி முனையில், கழிவுநீரோடை பள்ளம் மூடப்படாமல் காட்சியளிக்கிறது. நெல்லை டவுனை பொறுத்தவரை வாகையமுடி முனை முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பஸ் நிறுத்தம் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களுக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வஉசி தெரு, பாரதியார் தெரு, கிழக்கு ரதவீதியில் இருந்து வாகனங்களும் சகட்டு மேனிக்கு திரும்பும் நிலையில், வாகையடி முனை காணப்படும் கழிவுநீரோடை பள்ளம் அபாயமாக காட்சியளிக்கிறது.

மழைக்காலத்தில் கொசுக்கள் அடைந்துவரும் நிலையில், பொதுமக்கள் இப்பள்ளத்தை மூட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.  இந்நிலையில் கழிவுநீரோடைக்கு மூடு விழா எப்போது என அப்பகுதியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிளக்ஸ் போர்டும் வைத்தனர். இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கழிவுநீரோடையை மூடி, அதற்கான இணைப்பை வஉசி தெருவோடு இணைப்பதற்கு நிதியில்லை என மாநகராட்சி சார்பில் கூறப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் காணப்படும் கழிவுநீரோடை பள்ளத்தை மூடி, போக்குவரத்து சீராக மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: