ஸ்ரீபுரத்தில் இருந்து நெல்லையப்பர் கோயில் வரை நெல்லையப்பர் நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: ஆர்ச் அருகே விரிவாக்கப்பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து டவுன்ஆர்ச்  வரையிலான நெல்லையப்பர் நெடுஞ்சாலையாக நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ச் அருகே விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்று வட்ட சாலை (ரிங் ரோடு), பாளை குலவணிகர்புரம் ரயில்வே இருப்பு பாதை மேல் மேம்பாலம் அமைப்பது, அன்புநகர் ரயில்வே மேம்பாலப்பணியை முழுமையாக கட்டி முடிப்பது, பாளை நேரு பூங்கா எதிரே இருந்து தெற்கு பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பது போன்ற பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் முடங்கின.

இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகள் தீவிரமாக மேற்ெகாள்ளப்பட்டுவருகின்றன. இதில் புதிய பணியாக நெல்லை டவுனில் போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது. ஸ்ரீபுரம்-டவுன் சாலையில் இருபகுதியிலும் ஏராளமான வாகனங்களை நிறுத்திவைப்பதால் பல நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்த நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தை தொடர்ந்து ஸ்ரீபுரத்தில் இருந்து நெல்லை டவுன் ஆர்ச் வரை சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.

ஆர்ச்சில் இருந்து நெல்லையப்பர் கோயில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் ஸ்ரீபுரத்தில் இருந்து ஆர்ச் வரை நெடுஞ்சாலைத்துறையினரும், அதன் பின் நெல்லையப்பர் கோயில் வரையிலான சாலையை மாநகராட்சி சார்பிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சாலை 15 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்படும். மீதி உள்ள சாலையோர பகுதியில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்படும் மையப்பகுதியில் தடுப்பு அமைக்கப்படும். மேலும் டவுன் ஆர்ச் உள் பகுதியில் ஒரே நேரத்தில் இருமார்க்கத்தில் வாகனங்கள் நுழைந்து செல்வதில் உள்ள இடையூறை தவிர்க்க ஆர்ச்சின் இருபுறமும் சாலை அகலப்படுத்தப்படுகிறது.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஆர்ச் அருகே உள்ள ஒரு பழைய தியேட்டர் வளாகச்சுவர், மாவட்ட கல்வி அலுவலக சுற்றுச்சுவர் உள்ளிட்டவை இடித்து அகலப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மின்கம்பம் போன்றவைகளும் மாற்றி அமைக்கப்படஉள்ளன. ஆர்ச் அருகே நயினார்குளம் வரை உள்ள சாலையும் விரிவாக்கம் பெற உள்ளது. இதுபோல் டவுன் குற்றாலம் ரோடு மற்றும் நயினார்குளத்தை ஒட்டியுள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதற்காக ஆக்ரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படும். அதே நேரத்தில் தற்போதுள்ள வணிக வளாகங்கள், கடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

 இங்கு நடைபெறும் குடிநீர், குழாய் பதிப்பு பணி மற்றும் பாதாளசாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைத்ததும் பணியை தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதுபோல் ஸ்ரீபுரம் முதல் டவுன் ஆர்ச் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டத்திற்கான அனுமதி ஓரிரு வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து உடனடியாக இப்பணியும் தொடங்கப்பட உள்ளது.

Related Stories:

More
>