தும்மக்குண்டு கிராமத்தில் சுடுகாடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி

திருமங்கலம்: திருமங்கலம் அருகேயுள்ளது தும்மகுண்டு கிராமம். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் இந்திராகாலனி மற்றும் கிழக்கு தெரு பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு என கிராமத்தில் சுடுகாடு வசதியில்லை. யாராவது இறந்தால் உடலை புதைக்க அரை கிலோமீட்டர் தூரமுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.

சரியான பாதை வசதிகள் இல்லாததால் விளைநிலங்களை கடந்து தான் உடலை தூக்கி செல்லவேண்டும். மேலும் எரியூட்ட வசதிகள் இல்லாததால் அங்கு புதைத்து வந்தனர். செல்லும் வழியில் பெருமாள்பட்டி கண்மாயையும் தாண்டி செல்ல வேண்டியிருந்தது. மழைகாலங்களில் கண்மாயில் நீர் அதிகளவில் இருக்கும் போது உடலை எடுத்து செல்வதில் சிரமங்கள் இருந்தன. தும்மக்குண்டு ஆதிதிராவிட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் தும்மக்குண்டு ஆதிதிராவிட மக்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இதே கிராமத்தை சேர்ந்த விவசாய தம்பதிகளான சின்னச்சாமி, சரஸ்வதி ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு என தங்களது சொந்த இடத்தை தானமாக கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் தும்மக்குண்டு ஊராட்சி சார்பில் சுடுகாடு கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தும்மக்குண்டு ஊராட்சி தலைவர் பெருமாள் கூறுகையில், எங்கள் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது விவசாய தம்பதிகள் கொடுத்த 11 சென்ட் நிலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

எரி கொட்டகை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.9.70 லட்சம் செலவில் ஊராட்சி சார்பில் சுடுகாடு கட்டி முடித்துள்ளோம். இதன் மூலமாக பல ஆண்டுகளாக இருந்து வந்த தும்மக்குண்டு ஆதிதிராவிட மக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றார்.

Related Stories:

More
>