அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி: ஆனந்த குளியல் போடும் பொதுமக்கள்

அணைக்கட்டு:  அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமம் மலையடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, மலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மலைகளில் இருந்து வழிந்தோடும் நீர், ஊசூர் அடுத்த புலிமேடு கிராமம் மலை அடிவாரத்தில் ஆர்ப்பரித்து கொட்டி நீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதை பார்ப்பதற்கு ஆரம்பத்தில் புலிமேடு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டுமே வந்து சென்றனர். தற்போது வேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் வெளியூரை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அங்கு குளித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் அங்கு குவிந்து நீர்வீழ்ச்சியை கண்டும், குளித்துவிட்டும் சென்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தற்போது மீண்டும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அங்கு பொதுமக்கள் குவிந்து வருவதால் போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More
>