ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை:  ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள பள்ளக்கனியூர் பகுதியிலிருந்து கோட்டூர் பகுதிக்கு செல்லும் 3 கிலோமீட்டர் தார்சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக தற்போது ஏற்பட்டு உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: