தமிழக-ஆந்திர எல்லையில் 500 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவி: குவியும் சுற்றுலா பயணிகள்

வாணியம்பாடி: தமிழக-ஆந்திர எல்லையில் 500 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கியது போல் அருவியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப்பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக, ஆந்திரா, கர்நாடக எல்லைகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும்,  கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளிலும் மழை பெய்து வருகிறது.

இதில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் நன்னியாலா, பெத்தூர், காஞ்சனபல்லா, கோவிந்தம்பள்ளி, விஜிலாபுரம், கொத்தூர், கொல்லமடுகு போன்ற பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காப்புக்காடுகளில் உள்ள ஓடைகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதகடப்பா ஊராட்சியையொட்டி, ஆந்திர எல்லையில் வீரணமலை ஊராட்சி அமைந்துள்ளது.

இங்கு செலமசேண்ட்லு என்னும் மலைவாழ்மக்கள்  வசித்து வருகின்றனர். இந்த, வீரணமலை பகுதியில் சுமார் 500 அடி உயரத்தில் உள்ள அருவியில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டுவது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை காண தமிழக, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லைகளில் உள்ள பொதுமக்கள் கார்கள் மற்றும் பைக்குகளில் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலாப்பயணிகள் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது, மற்ற நாட்களிலும் இங்கு வந்து அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

ஆனால் இந்த பகுதியில் உணவு, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ெபரிய சுற்றுலா தலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: