கந்துவட்டியால் ஏழை தொழிலாளர்கள் பாதிப்பு: கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

கரூர்: கரூரில் கடந்த சில மாதங்களாக மீட்டர் வட்டி, கந்து வட்டி, தினசரி வட்டி, வார வட்டி என பல்வேறு வழிகளில் வட்டித்தொழில் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழைமக்கள் பாதிக்கப்படுவதால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் கரூர் மாவட்டமட் ஒன்றாகும். கரூரில் டெக்ஸ்டைல் தொழில், பஸ் பாடி கட்டும், கொசுவலை உற்பத்தி ஆகிய தொழில்கள் முக்கியமானவை. கரூரில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாடகை டாக்சி ஓட்டுனர்கள், டெக்ஸ்டைல் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், மகளிர் குழுக்கள் உள்ளனர்.

இவர்கள் அத்தியாவசிய தேவை, தவிர்க்க முடியாத தேவைக்கு வங்கியிலோ அல்லது பிற உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் நேரடியாக கடன்பெற முடிவதில்லை. இதனால் அத்தியாவசிய தேவையையும், அவசியத்தையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நேரடியாக எந்த ஒரு ஜாமீனும் இல்லாமல் கந்து வட்டிக்காரர்களை நேரடியாக பணத்திற்கு நாடுகின்றனர். அப்போது கந்து வட்டிக்காரர்கள் அதிக வட்டி பெறுவதற்கு குறிப்பிட்ட நிபந்தனைகளை முன் கூட்டியே தெரிவிக்கின்றனர். பணம்பெறும் பொதுமக்களோ அல்லது சிறு வியாபாரிகளே தங்களின் அவசரத் தேவை நிறைவு செய்தால் போதும் என்ற எண்ணத்தில் வட்டியைப் பற்றி கணக்கிடாமல் பணத்தைப் பெறுகின்றனர்.

காலையில் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டால் அன்று மாலை ரூபாய் 1100 கொடுக்க வேண்டும். அதேபோல் காலை ரூபாய் பத்தாயிரம் பெற்றுக்கொண்டால் அன்று இரவு ரூபாய் 11,000 கொடுக்க வேண்டும் இந்த விதிமுறையில் கந்துவட்டி காரர்களிடம் பணம் பெறுகின்றனர். சிலர் கந்துவட்டி வாங்கும்போது தினசரி சீட்டு என்ற அடிப்படையில் ஒரு நபரிடம் ரூபாய் 8000 கொடுத்து விட்டு அதன்பின் தினசரி ரூபாய் 100 வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் 100 நாட்கள் கழித்து 8000 வழங்கிவிட்டு ரூ.10 பத்தாயிரம் வாங்குகின்றனர். கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள் பெரும்பாலும் படித்த 35 வயதிற்கு குறைந்த இளைஞர்கள் ஆகவும், குறைந்த பட்சம் இரண்டு லட்சத்திற்கு அதிகமான விலை உள்ள மோட்டார் பைக்கில் வைத்து இவர்கள் வலம் வருகின்றனர்.

மோட்டார் சத்தத்தைக் கேட்டாலே கந்துவட்டிக்காரன் வருகின்றனர் என்று அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. இந்தத் தொழில் செய்பவர்கள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

பெயரில்லாமல் பல இடங்களில் எந்த ஒரு நிறுவனத்தின் பெயர் பலகை இல்லாமல் கந்துவட்டி தொழில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல அரசு வேலை செய்பவர்களும் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கந்து வட்டி தொழிலை கட்டுப்படுத்த கரூர் கலெக்டரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஏழைகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: