4 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை: குமரியில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

* ஆறாக மாறிய சாலைகள்

* செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின

குலசேகரம்:  குமரி மாவட்டத்தில் 4 நாட்களாக பெய்த கன மழையில், பல கிராமங்கள் வெள்ளத்தில்  மிதக்கின்றன. சாலைகள் மூழ்கியதால், போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த 14ம் தேதி மாலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று 4 வது நாளாக மழை பெய்தது. கடந்த இரு நாட்களாக மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

அணைகளின் பாதுகாப்பு கருதி, அணைகளுக்கு உள்வரத்து நீர் அப்படியே திறந்து விடப்பட்டன. இதனால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு, பரளியாற்றில் வெள்ளம் கரை புரண்டது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்றும் 4 வது நாளாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் கரைபுரண்டது. பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் நிரம்பி, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பிரதான போக்குவரத்து சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.

நேற்று முன் தினம் மாலையில் தெரிசனங்கோப்பு சந்திப்பு சாலை நீரில் மூழ்கியதால் அருமநல்லூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டிபுரம், கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கீரிப்பாறை தரை மட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று காலை முதல் படிப்படியாக தண்ணீர் ஓரளவு குறைந்து, வாகன போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் எந்த நேரத்திலும் வெள்ளம் வரலாம் என்பதால், அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு செல்லும் சாலையான மணியன்குழி, பொன்னையாகுளம் பகுதிகளில் நேற்றும் 2 வது நாளாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொன்னையாகுளம் பகுதியில் பஸ் நிறுத்தத்தை மூழ்கடிக்கும் வகையில் வெள்ளம் சென்றது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. களியல் - அருமனை செல்லும் சாலையில் நேற்று காலையிலும் வெள்ளம் அதிகமாக சென்றது. அந்த பகுதியில் உள்ள 15 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தரை தளத்தில் தண்ணீர் புகுந்ததால், வீடுகளில் இருந்தவர்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.

குழித்துறை சந்திப்பு முதல் வாவுபலி திடல் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல முடியும். அதன் பின்  செல்ல முடியாத வகையில் வெள்ளம் கரைபுரண்டது. அந்த பகுதியில் உள்ள நர்சரி கார்டன்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வாவுபலி திடல் அடையாளம் தெரியாத வகையில் வெள்ளம் ஓடியது. குழித்துறை சப்பாத்து பாலமும் மூழ்கியது. தாமிரபரணி கரையோரம் உள்ள திக்குறிச்சி பகுதியில் செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள், வாழைத்ேதாட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருவட்டார் பாரதப்பள்ளி, களியல் பகுதிகளிலும்  செங்கல் சூளைகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டன.

அருவிக்கரை பரளியாற்றிலும் வெள்ளம்  கரைபுரண்டு ஓடியது. திக்குறிச்சி - மார்த்தாண்டம் சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. கோதையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பாய்ந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர். மங்காடு ஆற்றுபாலம் மூழ்கியது :  தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று அதிகாலை மங்காடு ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது, கணபதியான்கடவு பாலத்தின் கீழ் பகுதியை  தொட்ட வண்ணம் தண்ணீர் சென்றது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்  மங்காடு, பள்ளிக்கல், வைக்கல்லூர் ஆற்றுப்பகுதியை வந்தடைந்தது.

இதனால் மங்காடு, ஆலவிளை, பணமுகம், மாமுகம், பள்ளிக்கல், வைக்கல்லூர், மரப்பாலம் ஆகிய கிராமங்களில் நள்ளிரவில் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதியில் வசிக்கும்  நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளிலும், அரசின் முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். வாவறை ஊராட்சி பணமுகம், மாமுகம் வீடுகளுக்குள் ஆற்றுநீர் புகுந்த காரணத்தால் 30 குடும்பங்களை சேர்ந்த 54 பெண்கள் 42 ஆண்கள் என மொத்தம் 96 நபர்கள் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கி உள்ளனர். இவர்களுக்கான அத்தியாவசிய அடிப்படை உதவிகளை வாவறை ஊராட்சி தலைவி மெற்றில்டா தலைமையில் அதிகாரிகள் செய்தனர்.

நித்திரவிளை- புதுக்கடை சாலை, மங்காடு- விரிவிளை சாலை, மங்காடு - முஞ்சிறை சாலை, மங்காடு- வாவறை சாலை, ஏலூர் முக்கு- வைக்கல்லூர் - மரப்பாலம் சாலை  ஆகிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலும் மழை விட்டு விட்டு பெய்ததால், அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகமாக இருந்தது. இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் அந்தந்த நிலைய அலுவலர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை மீட்பு படகு மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கோயில்களில் வெள்ளம் புகுந்தது

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பதிசாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்  கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. கோயில் பிரகாரத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் காலையில் பக்தர்கள் சிறிது நேரம் அனுமதிக்கப்பட வில்லை. மழை ஓரளவு குறைந்த பின், தண்ணீரை வெளியேற்றும் பணியில் பக்தர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர். இதே போல் திருவட்டார் ஆற்றூர் கல்லுப்பாலம் இசக்கியம்மன் கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கோயிலை மூழ்கடிக்கும் வகையில் வெள்ள நீர் சென்றது.

விளை நிலங்கள் மூழ்கின

தாமிரபரணி, பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், வாழை தோட்டங்கள், வயல் வெளிகள் மூழ்கின. கும்ப பூ சாகுபடிக்கான நடவுகள் பணிகள் முடிந்த வயல் வெளிகளிலும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா வருவது போல் குவிந்த மக்கள்

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை பார்க்க கார்கள், ஆட்டோக்கள், பைக்குகளில் பொதுமக்கள் திரண்டனர். பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி விடாமல் தடுக்கும் வகையில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேடிக்கை பார்க்க திரண்டவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். அருவிக்கரை பரளியாற்றில் , வெள்ளம் கரைபுரண்ட நிலையில் குளிப்பதற்காக சிலர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கூற்றவிளாகம் பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த பகுதியிலும் ஆபத்தை உணராமல் சிலர் குளிப்பதற்காக இறங்கினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கொள்ளையர்கள் மீதான பயத்தால் மக்கள் அச்சம்

களியல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளின் தரைதளம் மூழ்கியதால், மாடிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் இருந்தவர்களை தற்காலிக முகாம்களுக்கு வருமாறு தீயணைப்பு துறையினர் படகில் சென்று அழைத்தனர். ஆனால் வீடுகளில் இருந்தவர்கள், இப்போதைக்கு எங்களுக்கு ஆபத்து இல்லை. எனவே தற்காலிக முகாம்களுக்கு வர வில்லை என்று தெரிவித்து விட்டனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இது போன்று மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்த சமயத்தில், வீடுகளில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே கொள்ளையர்களுக்கு பயந்து வர மறுத்தனர். அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் படகில் சென்று மருந்து, மாத்திரைகள் தேவையா? என்பது பற்றி விசாரித்ததுடன், உடல் நலக்குறைவுடன் இருந்த வயதானவர்களை படகில் அழைத்து வந்தனர்.

Related Stories: