நாகர்கோவில் மாநகரில் சிதைந்து சின்னாபின்னமான சாலைகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

நாகர்கோவில்: திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை கேரள மாநில பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஆக்ரமிக்கப்பட்டு 40 அடி கூட  மிஞ்சாமல் தேசிய நெடுஞ்சாலை சுருங்கியுள்ளது. இந்த சாலை கன்னியாகுமரி முதல் கொட்டாரக்கரை வரை திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ராஜபாதையாக இருந்தது. பின்னர் இது சர்.சி.பி.ராமசாமி ஐயர் காலத்தில் காங்கிரிட் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டபோதிலும் ஆக்ரமிப்பு அகற்றம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து  வருகிறது.

சாலையோரங்களில் உள்ள பழக்கடைகள், பெட்டி கடைகளின் முன்பக்க போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றிவிட்டு ஆக்ரமிப்புகளை அகற்றி விட்டதாக அதிகாரிகள் கணக்கு காண்பிக்கின்றனர். திருவனந்தபுரம்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், குமரி பகுதிக்குள் வரும்  போது  கிராமச்சாலைக்குள் புகுந்துவிட்டது போன்று உணர்கின்ற நிலை இருந்து வருகிறது.  சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்ரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏதும் அகற்றாததால் தற்போது கடும் வாகன  நெருக்கடியில் மாவட்டம் சிக்கி தவித்து வருகின்றது.

இதுபோல் காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை உள்ள சாலையும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ளது. கடந்த சில வருடத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த இரு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பார்வதிபுரம், மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. ஆனால் களியக்காவிளை, குழித்துறை, தக்கலை, நாகர்கோவில் வடசேரி, ஒழுகினசேரி பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

கடந்த இருவருடமாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருவதால், சுற்றுலா வாகனங்கள் வருகை பெருவாரியாக குறைந்து இருந்தும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சுருங்கியும், சேதமடைந்து இருப்பதே காரணமாகும். நாகர்கோவில் மாநகர பகுதியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்திற்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கும் குழாய்கள் பதிக்க சாலைகள் உடைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பணியை மேற்கொள்ளும் போது பணியை முடித்து தேசிய நெடுஞ்சாலை கைவசம் கொடுக்க வேண்டும். அதற்கான பணமும் கொடுக்க வேண்டும்.

அப்படி கொடுக்கும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளை சீரமைக்கும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பணிகளை செய்யும் குடிநீர் வடிகால் வாரியம் பணி முடிந்து சாலைபோடும் பணியை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சரியாக சாலை போடவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நாகர்கோவில் மாநகர எல்லையான ஒழுகினசேரி பாலத்தின் ஒரு புறம் சாலை உடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த குழியால் வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் ஒழுகினசேரி பகுதியில் நெருக்கடியில் சிக்குகிறது. ஒழுகினசேரி முதல் வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பல கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆனால் பெயர் அளவிற்கு பேட்ஜ் ஒர்க் மட்டும் போட்டுள்ளனர். மேலும் ஒழுகினசேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் குழாய் பதிக்க வேண்டிய பணி இருப்பதால் சாலை போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோல் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டார் முதல் கலெக்டர் அலுவலகம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் இருந்து ஈத்தாமொழி பிரிவு சாலை வரை குழாய் பதிக்க வேண்டியுள்ளது. மற்ற இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய், குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.

ஆனால் சாலை இன்னும் போடாததால், பல விபத்துக்கள் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் குழாய் பதிக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை என குடிநீர் வடிகால் வாரியம் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் சாலையை சீரமைத்துவிட்டு இந்த பகுதியில் குழாய் பதிக்க தோண்டினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. அதனை சரிசெய்தால் அனுமதி தருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதால், கோட்டார் மார்கெட் பகுதியில் அதிக அளவு மழை நீர் செல்லும் நிலை இருந்து வருகிறது.

மழை பெய்யும்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் விழும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுபோல் கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை, குழித்துறை பகுதிகளிலும் குடிநீர் பணிக்காக குழாய்  பதிக்கப்பட்டுள்ளதால், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக  உள்ள பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் போட்டுள்ளதால், பைக், வாகனங்களில்  செல்பவர்கள்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்த முடிவு

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகரம் மிக முக்கிய பகுதியாகும். தினமும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதிகமான வாகனங்களும் மாநகர பகுதிக்குள் வருகிறது. மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதுபோல் நாகர்கோவில் மாநகர பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான  சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநகர பகுதியில் உள்ள சாலைகளையும், தேசிய நெடுஞ்சாலைகளையும் போர்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 52 வார்டுகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

பணி செய்வதில் சிக்கல்

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை பகுதியில் இருபுறமும் குளமும், நடுவில் சாலையும் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உடைந்த சாலை பகுதியை சீரமைத்தனர். ஆனால் சில நாட்களிலேயே சாலை மீண்டும் உடைந்தது. இதனை தொடர்ந்து சாலையின் இருபுறமும் தடுப்புசுவர் அமைத்து சாலையை உறுதிபடுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதற்கான டென்டர் விடப்பட்டு பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது.

தற்போது திருவனந்தபுரம் செல்லும் போது சாலையின் வலது புறம் தடுப்புசுவர் கட்டப்பட்டு மண்போட்டு சாலையை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இடது புறத்தில் மேற்குபகுதியில தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலை உடைந்துள்ள பகுதியில் தடுப்புசுவர் கட்ட அதற்கான கம்பிகள் கட்டப்பட்டுள்ளது. பருவமழை பெய்யும்போது  இந்த குளங்கள் நிரம்புவதால் பணிகள் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. தற்போதும் பெய்த தொடர் மழை காரணமாக குளம் நிரம்பியுள்ளது. இதனால் காங்கிரீட் போடும் பணி தடைப்பட்டுள்ளது.

வடசேரி சாலையை சீரமைக்க முடிவு

ஒழுகினசேரி முதல் ெவட்டூர்ணிமடம் வரை பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பணி முடிந்து இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் சீர் செய்து கொடுத்து இருக்கவேண்டும். ஆனால் ஒழுகினசேரியில் குழாய் பதிக்கவேண்டிய பணி இருப்பதால் அந்த பணி முடிந்து சீரமைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கலெக்டருக்கு புகார் செய்து வருவதால், தீபாவளி பண்டிகை முடிந்த உடன் இந்த சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து உள்ளது.

Related Stories: