தெங்கால் பாலாற்றில் திடீர் வெள்ளம்: மக்கள் குவிந்ததால் சுற்றுலா தலமாக காட்சியளித்தது

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பாலாற்றில் 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 3,500 கனஅடி தண்ணீர் கால்வாய் மூலமாக ஏரிகளுக்கு திறந்துவிடப்படுகிறது. மேலும், பாலாற்றில் இருந்து கால்வாய்   வழியாக காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி  விடப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராமம் பாலாறு மற்றும் நீவாநதி என்ற பொன்னையாறு ஆகிய 2 ஆறுகளும் சங்கமிக்கும் இடமாகும்.

தற்போது ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பாலாறு கடல்போல் காட்சி அளிக்கிறது. இதையறிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து தெங்கால் பாலாற்றை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி சுற்றுலா தலம் போல் மாறியுள்ளது. மேலும், ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலாற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பாலாற்றில் இறங்கி குளித்து வருகின்றனர்.

Related Stories: