சுண்ணாம்பாறு படகு குழாமில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்: நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்; கூடுதல் படகுகள் இயக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (பிடிடிசி) சார்பில் படகு குழாம் இயங்கி வருகிறது. இங்கிருந்து பாரடைஸ் பீச்சுக்கு படகுகள் இயக்கப்படுகிறது. பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளைகவர்வதற்காக வாட்டர் பலூன், செயற்கை குளியல், ஸ்பிரிங் ஜம்ப் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் பூங்கா, ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. எனவே, புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிமாநில பயணிகள், சுண்ணாம்பாறு படகு குழாமிற்கு செல்வதை தவிர்ப்பதில்லை.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆயுதபூஜையையொட்டி வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் நகரில் கடந்த 4 நாட்களாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

வெளிமாநில கார்களை அதிகளவில் பார்க்க முடிந்தது.சுண்ணாம்பாறு படகு குழாமிலும் தினமும் காலை முதல் சுற்றுலா பயணிகள் அலைமோதினர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். விடுமுறை நாட்களில் தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலும் வசூலாகியுள்ளது. மற்ற சாதாரண நாட்களில் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை வசூலாகும். தற்போது போட்அவுசில் தற்போது 20 சீட் கொண்ட 5 படகுகளும், 40 சீட் கொண்ட 2 படகுகளும், 30 சீட், 25 சீட், 80 சீட் உடைய தலா ஒரு படகும் இயக்கப்பட்டு வருகிறது.

ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் படகு சவாரிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, கூடுதல் படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் படகு குழாமிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலா பயணிகள் குவிந்திருந்ததை பார்த்த அவர், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: