கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

கடலூர்: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முடிந்ததையொட்டி, கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து, அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். சிலர் புரட்டாசி 3வது சனிக்கிழமையில் வீடுகளில் படையலிட்டு வழிபடுவார்கள். இன்னும் சிலர் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபட்டு தங்கள் விரதத்தை முடிப்பார்கள்.

அதன்படி புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நேற்று முன்தினம் முடிந்ததையடுத்து அசைவ பிரியர்கள் நேற்று இறைச்சி மற்றும் மீன்கள் வாங்க கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். அதன்படி கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் நீண்ட நாட்களாக அசைவம் சாப்பிடாமல் இருந்ததால் விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

இந்த புரட்டாசி மாதம் முழுவதும் மீன்களின் விலை வழக்கத்தைவிட சற்று குறைவாக காணப்பட்டது. ஆனால் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. கடலூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்தனர். இதனால் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலையும் அதிகரித்து காணப்பட்டது. அசைவத்தை அதிகம் விரும்பி உண்ணும் சிலர் நேற்று மீன் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டையும் சேர்த்து வாங்கிச் சென்றனர்.

Related Stories: