தமிழகத்தில் 38 மாவட்டங்களில் பதிவுத்துறையில் இன்று குறைதீர் முகாம்: பதிவுத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை, அக். 18: உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் 9 மாவட்டங்களில், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இன்று பதிவுத்துறை குறை தீர் முகாம் நடக்கிறது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் எளிதாகவும், வெளிப்படை தன்மையுடன் அமைய ஏதுவாக பதிவுத்துறை தொடர்பான புகார்கள், குறைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை கடந்த ஜூன் 16ம் தேதி தொடங்கி வைத்தார். இக்கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடம் இருந்து மின்னஞ்சல், தபால், தொலைபேசி மூலம் பதிவு தொடர்பான புகார்கள் நாளொன்றிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெறப்பட்டு வருகின்றன.

இதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பதிவுத்துறையில் தினமும் 500 புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர், டிஐஜிக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், வாரம்தோறும் ஒருநாள் பதிவு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே, பதிவுத்துறையில் உள்ள 9 மண்டலங்களிலும், 50 பதிவு மாவட்டங்களிலும் உரிய அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் வாரம்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த நிலையில், பதிவு குறைதீர்க்கும் முகாம் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் திங்களன்று குறை தீர் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் குறை தீர் முகாம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட பதிவாளர், 9 மண்டல டிஐஜி அலுவலகங்களில் குறை தீர் முகாம் நடக்கிறது. இந்த குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட பதிவாளர், 9 மண்டல டிஐஜி அலுவலகங்களில் குறை தீர் முகாம் நடக்கிறது. இந்த குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக் கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories:

More
>