அறுவை சிகிச்சையின்றி தொடையில் துளையிட்டு எம்போலைஷேசன் மூலம் சிகிச்சை: ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னை:விழுப்புரம் மாவட்டம், கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (49). இவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் விபத்து ஏற்ப்பட்டதையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மூளைக்கு செல்லும் எலும்பு உடைந்து, ரத்த ஓட்டத்தில் கசிவு ஏற்பட்டு, கண்கள் சிவந்து காணப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் சென்னை, ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த நுண்துளை இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணர் பெரியகருப்பன் தலைமையிலான டாக்டர்கள், பார்த்தசாரதி, சுரேஷ், பூபதி, சுரேஷ், ரமேஷ், இளவழகன் உள்ளிட்டார் அறுவை சிகிச்சையின்றி தொடையில் துளையிட்டு ‘எம்போலைஷேசன்’ வாயிலாக சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும் இது குறித்து நுண்துளை இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் பெரிய கருப்பன் கூறியதாவது: இந்த நோயாளிக்கு மூளை எலும்பு உடைந்து மூளைக்கு செல்லக்கூடிய நல்ல ரத்தம், கெட்ட ரத்தம் ஆகியவை ஒருசேர கசிய துவங்கியது.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் அவருக்கு ‘எம்போலைஷேசன்’ சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம்.

மருத்துவமனையின் இயக்குனர் விமலா ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி, இச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டால் ரூ.8 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளித்தோம். மேலும் இதுபோன்ற சிகிச்சை தமிழக அரசு மருத்துவமனைகளில் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு டாக்டர் கூறினார்.

Related Stories:

More
>