இன்ஜினியரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு அதிக மவுசு: 2ம் இடத்தில் மெக்கானிக்கல்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்காக நடந்த கவுன்சலிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையே அதிக மாணவ -மாணவியர் தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக, மெக்கானிக்கல் பாடப் பிரிவை தேர்வு செய்துள்ளனர். சிவில் பிரிவை அதிகமான மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். பிஇ, பிடெக் படிப்புகளில்  இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இதுவரை நான்கு சுற்றுகள் நடந்து முடிந்துள்ளது. காலி இடம் இருக்கும் வரை கவுன்சலிங்களை நடத்துவோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி தற்போது ஏற்பட்டுள்ள 63 காலியிடங்களுக்கு துணைக் கவுன்சலிங் தொடங்க உள்ளது.

இது வரை நடந்துள்ள 4 சுற்றுகளில் 59.13 சதவீதம் இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. கடந்த ஆண்டில் இதே 4 சுற்று முடிவில் 44.06 சதவீத இடங்கள் தான் பூர்த்தி செய்யப்பட்டு  இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 15 சதவீத இடங்கள் கூடுதலாக பூர்த்தியாகியுள்ளது என்று கூறலாம். கடந்த ஆண்டில் 16 கல்லூரிகளில் ஒரு இடம்கூட பூர்த்தியாகவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் 7 கல்லூரிகளில்தான் ஒருவர்கூட சேராத நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் அதிக அளவில் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது கணினி அறிவியல் பாடம்தான். இதுவரை நடந்துமுடிந்த கவுன்சலிங்கில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் இந்த ஆண்டில் அவர்கள் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவுகளில் முதலிடத்தை பிடித்தது எது என்று பார்த்தால், கணினி அறிவியல்( கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப் பிரிவுதான்.

இந்த பாடப் பிரிவைத் தான் மாணவ மாணவியர் தேடித் தேடி தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் கணினி அறிவியலுக்கு என்றும் அழிவில்லை என்பது மாணவர்கள் மூலம் நிரூபணம்  ஆகியுள்ளது. அதாவது, கவுன்சலிங்கில் பங்கேற்ற 80353 மாணவ மாணவியரில் 32284 பேர் கணினி அறிவியல் பாடப் பிரிவை தேர்வு செய்துள்ளனர்.  அ தற்கு அடுத்த நிலையில், மெக்கானிக்கல் பாடப் பிரிவையும், இஇஇ பிரிவையும்,  இறுதியாக சிவில் பாடப் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர் என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 54 ஆயிரத்து 383 இடங்கள் வரை காலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. நடப்பு ஆண்டில் 85 கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 113 கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன. 218 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் மேலும், 65 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இடங்கள் நிரம்பியுள்ளன என்றும் கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: