தஞ்சை அருகே அதிமுக பொன்விழா ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: மாஜி எம்எல்ஏ மீது வழக்கு

பேராவூரணி: தஞ்சை அருகே அதிமுக பொன்விழா ஆண்டு ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் நகர செயலாளர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மாஜி எம்எல்ஏ கோவிந்தராசு , அவரது மகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசு. இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தினார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தத்திற்கு, வைத்திலிங்கம் சிபாரிசில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

சீட் கிடைக்காவிட்டாலும் கோவிந்தராசு தரப்பு தேர்தல் வேலை பார்த்தும் திருஞானசம்பந்தம் தேர்தலில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு பின் அதிமுகவில் கோவிந்தராசு கோஷ்டி, திருஞானசம்பந்தம் கோஷ்டி என இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசு தலைமையில் அணிவகுப்போம் என கோவிந்தராசு தரப்பு போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதே போல் சமூக வலைதளங்களில் முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம் தலைமையில் அணிவகுப்போம் என தகவல் தொழில்நுட்ப அணியினர் பதிவு செய்திருந்தனர்.

அப்போது பயணியர் மாளிகை அருகே கோவிந்தராசு தரப்பினர் ஊர்வலமாக செல்ல காத்திருந்தனர். எதிரே திருமணமண்டபம் அருகே திருஞானசம்பந்தம் கோஷ்டியினர் நின்று இருந்தனர். இதில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது திருஞானசம்பந்தம் ஆதரவாளரான தகவல் தொழில்நுட்ப அணி பேராவூரணி நகர செயலாளர் கருணாகரன்(35) என்பவர் செல்போனில் ஊர்வலத்தை படம் பிடித்தாராம். இதை கோவிந்தராசு தடுத்துள்ளார். இதனால் இவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கோவிந்தராசு மகன் இளங்கோ , நகர செயலாளர் கருணாகரனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கருணாகரன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருணாகரன், பேராவூரணி போலீசில் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசு மற்றும் அவரது மகன் இளங்கோ ஆகியோர் மீது புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தந்தை மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>