சேலம் பியூட்டி பார்லர் இளம்பெண் கொலை வழக்கு மும்பை, வங்கதேசத்திற்கு கொலையாளிகள் ஓட்டம்: காதலனை பெங்களூருவுக்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை

சேலம்: சேலம் பியூட்டி பார்லர் இளம்பெண் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வரும் 3 பேர் மும்ைப, வங்கதேசத்திற்கு தப்பியோடியுள்ளனர். பெங்களூருவில் பதுங்கியுள்ள மற்றொரு பெண்ணை பிடிக்க காதலனுடன் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (26). சேலத்தில் 3 இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த தேஜ்மண்டல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸ் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா, 5 தனிப்படைகளை அமைத்துள்ளார். 5 தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கொலையான தேஜ்மண்டலின் ரகசிய காதலன், விபசார கும்பல் தலைவனாக செயல்பட்ட ஆத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த பிரதாப்பை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தேஜ்மண்டல், தனது மசாஜ் சென்டரில் பணியாற்றிய 4 பேரை ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார். அவர்கள் தான், கடைசியாக சூட்கேஸ் பெட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்து, கதவை பூட்டுகின்றனர். ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் மட்டுமே செல்கின்றனர். அதில், அந்த ஆண், சிசிடிவி கேமராவை தள்ளியும் விடுகிறார்.

இக்காட்சிகளை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தான் இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களை பற்றி விசாரித்தபோது, வங்கதேசத்தை சேர்ந்த லப்லு, இளம்பெண் நிசி, மும்பையை சேர்ந்த இளம்பெண் ரிஷி, பெங்களூருவைச் சேர்ந்த ஷீலா எனத் தெரியவந்தது. இந்த 4 பேரும் சம்பவம் நடந்த நாளில் இருந்து தலைமறைவாகியுள்ளனர். சேலத்தில் கொலையை செய்து விட்டு, பெங்களூருவுக்கு தப்பிச் சென்றது முதலில் தெரியவந்தது. அதன்பேரில், கொலையான தேஜ்மண்டலின் காதலனாக பிரதாப்பை அழைத்துக் கொண்டு, தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லப்லு, நிசி ஆகிய இருவரும் வங்கதேசத்திற்கும், ரிஷி மும்பைக்கும் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதனால், அவர்களை பிடிக்க வங்கதேசம் மற்றும் மும்பைக்கு தனிப்படை போலீசார் செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், பெங்களூருவில் பதுங்கியிருக்கும் ஷீலாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேஜ்மண்டல், தனது காதலான பிரதாப் மூலம் பாலியல் தொழிலை தனது மசாஜ் சென்டரில் நடத்தி வந்துள்ளார். பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டியில் பிரதாப் மீது  பாலியல் தொழில் வழக்கு உள்ளது. ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார். சம்பாதிக்கும் பணத்தை கொண்டு, சில ரவுடிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். தற்போது, அவர் கூட இருந்தவர்களே கொலை செய்துள்ளனர். அவர்கள், சம்பவம் நடந்த நாளில் இருந்து தலைமறைவாகி உள்ளனர். மும்பை, வங்கதேசம் தப்பிச் சென்றுள்ள அவர்களை பிடித்தால் தான், கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்,’’ என்றனர்.

Related Stories:

More
>