மூலப்பொருள் விலை ஆர்டர் எடுத்த பிறகு கிடுகிடு உயர்வு காலண்டர் விலை கையை கடிக்கும்?: 35% விலை உயரும் என உற்பத்தியாளர்கள் கவலை

சிவகாசி: 2022ம் ஆண்டுக்கான காலண்டர் ஆர்டர் எடுத்த பின் மூலப்பொருள் விலை, ஜிஎஸ்டி உயர்வால் காலண்டர் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். காலண்டர் விலை 35 சதம் உயரும் என தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சக தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணி பிரதானமாக உள்ளது. நகரில் உள்ள 800க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் தயாரிப்பு பணியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 2022ம் ஆண்டிற்கான தினசரி, மாத காலண்டர்கள்  தயாரிப்பு பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 காலண்டர் தயாரிப்பு மூலம் சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. காலண்டர் தயா­ரிப்புக்கு அட்டை, ஆர்ட் பேப்பர், களிங்கம் ஆகி­யவை முக்­கிய மூலப்பொருளாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு மூலப்பொருள் 15 சதவீதம் விலை உயர்ந்த நிலையில், பேப்பர் தட்டுப்பாடு காரணமாக  மீண்டும் 20 சதவீதம் விலை உயந்துள்ளது. இதனால், முன்னதாக ஆர்டர் வாங்கிய  காலண்டர் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மூலப்பொருள் விலை உயர்வு: கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற ஒரு டன் அட்டை, இந்தாண்டு ஜூலையில் ரூ.28 ஆயிரமாகவும், தற்போது ரூ.38 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற ஆர்ட் பேப்பர் கடந்த ஜூலையில் 72 ஆயிரமாகவும், தற்போது ரூ.84 ஆயிரமாகவும் உயர்ந்­துள்­ளது. கடந்தாண்டு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி கடந்த 1ம் தேதி முதல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட 2022ம் ஆண்டு காலண்டர்களின் விலை 35 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>