பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம் ஆயுள் கைதிகள் 700 பேர் 20 நாட்களில் விடுதலை: அமைச்சர் ரகுபதி பேட்டி

திருச்சி: அண்ணா பிறந்த நாளையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர், இன்னும் 20 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: இந்தியாவிலேயே 2 சிறைகளில் மட்டுமே ஐடிஐ வகுப்பு எடுக்கப்படுகிறது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் சிறை, மற்றொன்று திருச்சி மத்திய சிறையாகும். சிறையில் ஐடிஐ படித்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு என்சிவிடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மற்ற மாணவர்களை போன்று சிறையில் ஐடிஐ படிக்கும் மாணவர்களும் வெளியில் படிக்கும் மாணவர்களை போல் நல்ல தகுதி பெறுகின்றனர். சிறையில் தரமான உணவும், தரமான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கைதிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.அண்ணா பிறந்த நாளில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதில் எந்த சிக்கலும் இல்லை. வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு, பெருங்குற்றம் செய்த கைதிகளை தவிர மற்ற கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைவாசகம் அனுபவித்து வரும் 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: