அம்பாசமுத்திரம் அருகே குடும்பத்தகராறில் தாய் கழுத்தை நெரித்துக் கொலை: நாடகமாடிய மகன், தந்தையுடன் கைது

அம்பை:  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிட்டான். இவரது மனைவி  சங்கரம்மாள். இந்த தம்பதியின் மகன் தளவாய். சங்கரம்மாள் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இறந்து விட்டதாகக் கூறி கணவர் கிட்டான், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்துசென்ற போலீசார், சங்கரம்மாள் உடலை பார்வையிட்டனர். அதில் அவரது மூக்கில் ரத்தக்காயம் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் ஏற்படவே உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சங்கரம்மாள் தனது மகனுக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்னர் தனது சொந்த சகோதரனின் மகளான நெல்லையில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியை திருமணம் செய்து வைத்தாராம். ஆனால்,  ஓராண்டு கழிந்த பிறகும் படிப்பை காரணம் காட்டி மகனையும், மருமகளையும் சேர விடாமல் பிரித்து வைத்திருந்த சங்கரம்மாள், போனில் கூட இருவரையும் பேசவிடாமலும் தடுத்து வைத்திருந்தாராம். அத்துடன் சமீபத்தில் மாஞ்சோலையில் நடந்த லாரி விபத்தில் காயமடைந்த மகன் தளவாயை பார்ப்பதற்குக்கூட மருமகளை சங்கரம்மாள் அனுமதிக்கவில்லையாம்.

 இதனால் சங்கரம்மாள் மீது மகன் தளவாய் தீராத ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த  தளவாயும், கிட்டானும் சேர்ந்து சங்கரம்மாளை தாக்கி, சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தடய அறிவியல் பரிசோதனையிலும் இது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் தளவாய், அவரது தந்தை கிட்டான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

More
>