கையிருப்பை சந்தையில் விடுவித்து வெங்காயம் விலையை ரூ.21க்கு குறையுங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கையிருப்பில் இருந்த வெங்காயம் விடுக்கப்பட்டதால், அதன் விலை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், உருளை, தக்காளி விலை ஏற்றத்தை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,’ என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு போன்றவற்றின் உற்பத்தி கனமழை காரணமாக பாதிக்கப்பட்டதால், இவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இதை கட்டுப்படுத்துவதற்காக இவற்றை கையிருப்பு வைக்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒன்றிய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதல் வருகை முதல் விற்பனை என்ற அடிப்படையில் மார்க்கெட்டில் இருப்பில் உள்ள வெங்காயம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி கிலோ 57 வரை விற்ற வெங்காயம் தற்போது ரூ.37க்கு குறைந்துள்ளது. மேலும், மொத்த கொள்முதல் கடையில் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

எனவே, இருப்பை உள்ள வெங்காயத்தை மார்க்கெட்டில் வினியோகம் செய்து, அந்தந்த மாநில அரசு விலையை குறைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிரேட் ‘பி’ ரக வெங்காயத்தை அனைத்து மாநிலங்களும் கிடங்கில் இருந்து வினியோகம் செய்து கிலோ ரூ.21க்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போன்று தக்காளி, உருளை விலைகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Related Stories:

More
>