பாசம் காட்டுவது சீனாவிடம் பணம் கேட்பது இந்தியாவிடம்: இலங்கை அரசு தகிடுதத்தம்

கொழும்பு: எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதால் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து இலங்கை ரூ..3752கோடி கடனாக பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் இருப்பு குறைந்துள்ளது. தற்போதுள்ள இருப்பின் அளவின்படி வரும் ஜனவரி மாதம் வரையில் மட்டுமே எரிபொருளை பயன்படுத்த முடியும். அதற்குள் எரிபொருளை வாங்க வேண்டும் என்று இந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் உதயா கம்மான்பிளா, அரசை எச்சரித்துள்ளார். இதனால், எரிபொருளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவுக்கு நெருங்கிய நட்பு நாடாக இருந்து வந்த இலங்கை, சமீப காலமாக சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில், அம்பன்தோட்டா துறைமுகம் போன்றவற்றை சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது. அந்த நாட்டிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி சிக்கியுள்ளது. இந்நிலையில், தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிடம் கடன் வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அரசின் ‘சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனம், நாட்டின் 2 முக்கிய அரசு வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கியிடம் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. இதனால், அவற்றிடம் மேலும் கடன் கேட்க முடியாத நிலையில் இருக்கிறது. இது தொடர்பாக, சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜேசிங் கூறுகையில், ‘‘எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் கடன் பெறுவதற்கு முடிவு செய்துள்ளோம். இந்தியா- இலங்கை பொருளாதார உறவின் அடிப்படையில் ரூ.3,752 கோடி கடனுதவி பெற உள்ளோம். விரைவில் இது தொடர்பாக இருநாட்டு எரிபொருள் துறை செயலாளர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்,” என்றார்.

Related Stories:

More
>