திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றுவது உறுதி

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 49 ஊராட்சிகள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்களில் நெம்மேலி ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்ற சுயேட்சை தேசிங்கு கடந்த 14ம் தேதியே மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனை சந்தித்து ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும், இரண்டு பா.ம.க. கவுன்சிலர்களான தண்டலம் சித்ரா தட்சிணாமூர்த்தி மற்றும் பனங்காட்டுப்பாக்கம் அருண்குமார் ஆகிய இருவரும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் மற்றொரு சுயேட்சை ஒன்றிய கவுன்சிலரான முட்டுக்காடு ராஜேஷ் நேற்று மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசனை சந்தித்து ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தி.மு.க.வின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. பிடிப்பது

உறுதியாகிவிட்டது.

Related Stories: