ரவுடி வெட்டிக்கொலை விவகாரம் நண்டு சமைத்துள்ளதாக வீட்டிற்கு அழைத்து காதலியே கொலைக்கு உதவியது அம்பலம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது காதலியே கொலைக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஆதம்பாக்கம், கக்கன் நகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (28). இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல்,  கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 14ம் தேதி, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் உள்ள தனது காதலி லோகேஸ்வரி வீட்டிற்கு சென்றபோது, அங்கு வந்த 8 பேர், இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராபின் (27), கஞ்சா விற்கும் தகராறு மற்றும் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர் மீரானை வெட்டிக் கொன்றது தெரிந்தது. இவர்கள் 8 பேரும், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.  அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனிடையே, லோகேஸ்வரி வீட்டில் நாகூர் மீரான் இருந்தது எப்படி எதிர் தரப்பினருக்கு தெரிந்தது என்ற கோணத்தில், லோகேஸ்வரியை அழைத்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில், கைதான ராபினிடம் இவர் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது, அவர் கொலைக்கு உதவியது தெரியவந்தது.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:  நாகூர் மீரான் அடிக்கடி தனது காதலி லோகேஸ்வரி வீட்டிற்கு வந்து, தனிமையில் இருப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஸ்வரி, நாகூர் மீரானை எதிர் தரப்பை சேர்ந்த ராபின், கொலை செய்ய திட்டமிட்டுள்ளது அறிந்து, அவருக்கு உதவ நினைத்தார். அதன்படி, சம்பவத்தன்று நாகூர் மீரானை செல்போனில் தொடர்புகொண்ட லோகேஸ்வரி, ‘‘உனக்கு பிடித்த நண்டு சமைத்து இருக்கிறேன். வீட்டிற்கு வா’’ என கூறியுள்ளார். அதன்பேரில், நாகூர் மீரான் காதலி வீட்டிற்கு சென்று, மது அருந்திவிட்டு நண்டு சாப்பிட்டுள்ளார். அப்போது, நைசாக எதிர் தரப்பை சேர்ந்த ராபினுக்கு போன் செய்து, நாகூர் மீரான் தனது வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கூட்டாளிகளுடன் அங்கு வந்த ராபின், நாகூர் மீரானை கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லோகேஸ்வரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

* கூட்டாளிகள் 4 பேர் கைது

நாகூர் மீரான் கொலைக்கு பழிக்கு பழியாக ராபினின் உறவினரை வெட்டிய வழக்கில் ஆதம்பாக்கம் காந்தி நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்த  நிசாந்த் (எ) பப்லு (28), சிம்மிலி (எ) விஜயகுமார் (20), போரூர் ஏரிக்கரை தெரு செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்த மணி (எ) டெம்போ மணி (27),  சைதாப்பேட்டை, ஜோதிமா நகர், 11வது தெருவை சேர்ந்த குட்டி (எ) குறளரசன் (32)  ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி கோழிக்கால் ராஜேஷ், டேனியல் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: