மாநகராட்சி, போலீஸ் தடையை மீறி மெரினாவில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு: போலீசார் திருப்பி அனுப்பினர்

சென்னை: மெரினாவில், தடையை மீறி குளிக்க முயன்ற பொதுமக்களை போலீசார் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, ஞாயிற்றுக்கிழமைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகளவில் கூடியதால், தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்தது.

தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக, நவம்பர் 1ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற நாட்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து தினமும் மக்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், சிலர் அத்துமீறி மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதனை கருத்தில் கொண்டு மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் தடையை மீறி பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் நேற்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் மணல் பகுதி மற்றும் கடல் பகுதி ஆகியவற்றுக்கு பொதுமக்கள் சென்று விடாதபடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த போதிலும் ஒரு சிலர் அதனை மீறி கடல் பகுதிக்கு சென்றனர். தடையை மீறி மணற்பரப்பிற்க்கு சென்றவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். கடற்கரை பகுதியில் தடையை மீறி இளைஞர்கள் குளிப்பதை கட்டுப்படுத்த சிறிய வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் சென்று போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

மெரினா கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க, கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையில் இடம் பெற்றுள்ள போலீசார், நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்களும் தயார் நிலையில் இருந்தனர். இது தவிர டிரோன்கள் மூலமாகவும் போலீசார் கடற்கரை பகுதி முழுவதையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மெரினா கடலில் குளிக்கும் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிமாகிக் கொண்டே இருப்பதால் அதை தடுக்கும் பொருட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>