மின் தேவையை சமாளிக்க திட்டம் தேவைப்படும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க வெளிச்சந்தைகளில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மின் வாரியம் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்திச் செலவை விட 5 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது மின்வாரியத்தை நிலைகுலையச் செய்து விடும். தமிழ்நாட்டில் 2500 மெகாவாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு இருப்பதை மின்சாரத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.61 என்ற விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார்.

ஆனால், களச்சூழலின் அவசரத்திற்கு ஏற்ப அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. ஒரு யூனிட் அனல் மின்சாரம் ரூ.2.61க்கு கிடைத்தால் அது அரசுக்கு லாபம் தான்; ஆனால், கிடைக்குமா? என்பது தெரியவில்லை. தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே 1.59 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மின்சார வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இந்தக் கடனையும், மின்சார வாரியத்தின் இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. அதற்கேற்ற வகையில் இப்போதைய மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்கவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: