கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெறுவது எப்படி? பேரிடர் மேலாண்மை ஆணையம், நிதித்துறை முடிவு செய்யும்

சென்னை: தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வேகமாக பரவத் தொடங்கியது. அதன்பிறகு படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் 2ம் அலை வேகமாக பரவியது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 26,87,092 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35,899 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 2ம் அலையின்போது மட்டும், கொரோனாவால் தமிழகத்தில் 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல வீடுகளில் குடும்பத் தலைவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததால், அந்த குடும்பத்தின் வருவாய் ஆதாரமே முடங்கியது.

இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக மாநில அரசுகள், தங்களது பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குமாறு ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதன்பேரில் நிதி உதவி வழங்க பல்வேறு மாநிலங்கள் முதல்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கேரளத்திலும் அதுதொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த அனைத்து தரவுகளும், விவரங்களும் மாநில அரசிடம் உள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதித்துறையும் முடிவு செய்ய வேண்டும். அதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், அதற்கான ஒத்தழைப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அளிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: